சென்னை:

ட்ஜெட் தொடர்பாக மாநில நிதிஅமைச்சர்கள் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூட்டியுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள தமிழக துணை முதல்வரும்,  நிதி அமைச்சருமான  ஓ.பி.பன்னீர்செல்வம்  நாளை டில்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் மூலம் பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து, நாளை (ஜூன் 20ந்தேதி)  நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர்  நடைபெற்று வரும் நிலையில், அதைத்தொடர்ந்து ஜூலை 5ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட் தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

பட்ஜெட் தொடர்பாக பல வணிக நிறுவன அதிபர்கள் உள்பட பலரை சந்தித்து பேசி வரும் நிலையில், மாநிலங்களுக்கு தேவையான நிதிகள் ஒதுக்கப்படுவது குறித்து விவாதிக்கும் வகையில், வரும் 21ந்தேதி மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இநத் கூட்டத்தில் பங்குகொள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை மாலை டெல்லி பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின்போது, ஓபிஎஸ், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல அமைச்சர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.