திருவனந்தபுரம்,

பிரபலமான சபரிமலை  ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது  இந்த உலக  பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து, கடும் விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்த கோவிலில் வீற்றிருக்கும்  ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் அமர்ந்திருப்ப சாஸ்திரம் கூறுகிறது.

இந்த கோவிலில் இளம்பெண்கள் மாறுவேடத்தில் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்த வழக்கும் நடைபெற்றது.

கோவிலின் பாரம்பரியமான ஐதிகத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது என தேவசம் போர்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இளம்பெண்கள் சிலர் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த செயல், கோவில் நிர்வாகமான  திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தையும், கேரள அரசையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து,  தேவஸ்வம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் மேற்கொள்வார்கள் என்றும், உண்மையை விரைவில் வெளிக்கொண்டுவர தேவசம்போர்டு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும்,  ‘‘கொல்லம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சபரி மலையில் விசேஷ தரிசனம் செய்வதற்கான அனுமதி அளிக்கப் பட்டது. அவர் அதை தவறாக உபயோகப்படுத்தி, தன்னுடன் பெண்கள் சிலரை அழைத்துச்சென்று தரிசனம் செய்ததாக புகார்கள் வந்துள்ளது.

விஐபி தரிசனம் என்ற பெயரில் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை தவறாக பயன் படுத்துவது சட்டவிரோதமானது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.