மாநில அரசு புதிய திட்டங்களையோ, அல்லது புதிய உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். அதன்படி அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. அத்துடன் காலியாக உள்ள கனியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை முறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 15 சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு (2021) நடை பெற இருப்பது 16 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகும்.  தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 62.6 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனவும்  சோழிங்கநல்லூர் சட்டசபையில் 694,845 வாக்காளர்களுடன் அதிக தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2016சட்டமன்ற  தேர்தலின்போது 66ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது  மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இது கடந்த தேர்தலை விட 34.73 சதவிகிதம் அதிகம்.

ஒரு வாக்குச்சாவடியில் அதிகப்பட்சமாக 1000 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்களிக்கும் நேரம் ஒருமணி நேரம்  அதிகரிக்கப்படுகிறது என்றார். ஊனமுற்றோர்களுக்காக சக்கர நாற்காலிகள், சாய்வு தளம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், 60 வயதுடையவர்களுக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல, தனிநபர் விருப்பமே என்றும் தெரிவித்தார்.

வீடு வீடாக சென்று 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும்

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்களுடன்  2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும்,  2 வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதுடன்,

ஆன்லைன் மூலம் வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்து, அதற்கான பணத்தையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் உடனே அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தமிழகத்தில்,  மாநில அரசு புதிய திட்டங்களையோ, அல்லது புதிய உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.