அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: தமிழக அரசு ரூ.1,532 கோடி மதிப்பிலான டெண்டர் வெளியீடு

சென்னை:

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்டகால  கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தற்காக ரூ. 1532 கோடி அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் பாசனம் மற்றும்  குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்,  பவானி ஆற்றில் இருந்து இருந்து தண்ணீர் கொண்டுவரும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த கடந்த  50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால், தற்போதுதான் அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி,  கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நிரப்பி குடிநீர் மற்றும் நீர்பாசன தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.

இந்த திட்டம் குறித்து 1957ம் ஆண்டு சட்டமன்ற மன்றத்தில், அந்த பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மாறப்பகவுண்டர் தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொருமுறையும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் தேர்தல் சமயத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று உறுதி மொழி வழங்கி வந்த நிலையில், தற்போதுதான் அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக தமிழக அரசின் 2018-2019ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.  அதைத்தொடர்ந்து தற்போது,  ரூ.1,532 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் இன்று முதல்,   2019ம் ஆண்டு ஜன.-23ம் தேதி  மாலை 3 மணி வரை கோரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து அன்று மாலையே (ஜனவரி 23, 2019) டெண்டர் திறக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 34 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், தொடர்ந்து  60 மாதங்களுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், கோவை, ஈரோடு, திருப்பூர்  மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 25,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்  என்று நம்பப்படுகிறது.