சென்னை: ஆண்டுகள் பல கடந்த நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை ஒருவழியாக இறுதிசெய்துள்ளது மாநில அரசு.

மொத்தம் 6 இடங்கள் இதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. திருப்போரூர், வல்லாத்தூர், தோடூர், செய்யார், மதுரமங்கலம் மற்றும் மப்பேடு ஆகிய 6 இடங்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இன்னும் சில நாட்களில், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகளுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தும். அதன்படி, இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 6 இடங்களில் எது உகந்த இடம் என்பது விவாதிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும் செயல்முறைகளும் இடம்பெறும்.

“பல இடங்கள் தேடலில் இருந்தது. அவைகளில் 6 இடங்களை மட்டும் இறுதி செய்துள்ளோம். தற்போது பட்டியலில் உள்ள இடங்களில் 1 இடத்தை இரண்டு மாதங்கள் முன்னரே அடையாளம் கண்டோம். ஆனால், தொழில்நுட்பக் காரணங்களுக்காக அந்த இடம் சரிவராது என்று இந்திய விமானநிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துவிட்டார்கள்” என்று மாநில அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய விமான நிலையத்திற்கான இடஅளவு குறைந்தது 2000 முதல் 2500 ஏக்கர்கள் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் இல்லை என்பதால், இரண்டாம் விமான நிலையம் அமைப்பதற்கு இடம் தேடுவதற்கான முயற்சிகள் பல்லாண்டுகளுக்கு முனபே துவங்கின.