மத்திய அரசின் நிர்பயா நிதியை மாநிலங்கள் சரிவரப் பயன்படுத்துவதில்லை : அரசு தகவல்

டில்லி

நிர்பயா நிதி என பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு அளிக்கும் நிதியைப் பல மாநில அரசுகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2012 ஆம் வருடம் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.   அதையொட்டி பெண்கள் பலர் பாதுகாப்பு தேவை எனப் போராட்டம் நடத்தினார்கள்   அந்த போராட்டத்துக்குப் பிறகு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் 2013 ஆம் வருடம் முதல் நிர்பயா நிதி உதவி அளிக்கத் தொடங்கியது.

இந்த நிதியை அனைத்து மாநிலங்களும் பெண்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கபட்ட்டது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த தகவலின்படி இந்த நிதியை மாநிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இந்த நிதிக்காக  மத்திய அரசு 2013-14 மற்றும் 2014-15 ஆம் வருடம் ரூ.1000 கோடி, 2016-17 மற்றும் 2017-18 ஆம் வருடம் ரூ.550 கோடி  2018-19 மற்றும் 2019-20 ஆம் வருடம் ரூ.500 கோடி நிதி அளித்துள்ளது.  நிர்பயா நிதியில் இருந்து மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

அத்துடன் கர்நாடகா ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம்  உள்ளிட்ட மாநிலங்கள் மிகக் குறைந்த அளவில் நிர்பயா நிதியில் இருந்து பெண்கள்  பாதுகாப்புக்காகச் செலவழித்துள்ளன. குறிப்பாகத் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.43 கோடி ரூபாய் நிதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.