புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனா எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

மேலும், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும்.

மேலும், அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். அவர்களின் ஈடு இணையில்லாத பணியை பாராட்டி விருது வழங்கப்படும்.
கொரோனா தடுப்புப் பணியில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.