குகையில் மாட்டிய  சிறுவனின் வியக்க வைக்கும் ஆங்கில அறிவு

சியாங் ராய்

தாய்லாந்து குகையில் மாட்டிய அப்துல் சாம் என்னும் சிறுவனின் ஆங்கில அறிவை அனைவரும் புகழ்கின்றனர்.

தாய்லாந்து குகையில் 12 சிறுவர்கள் தங்கள் கால்பந்து பயிற்சியாளருடன் தாய்லாந்து குகைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.  அப்போது கனமழை காரணமாக குகையின் உள்ளே சகதியும் வெள்ளமும் நுழைந்து இவர்கள் வெளி வர முடியாமல் மாட்டிக் கொண்டனர்.    ஒரு மேடான இடத்தில் தங்கி இருந்தவர்களை நீச்சல் வீரர்கள் கண்டு பிடித்தனர்,

அதன் பிறகு மேலும் மழை வலுக்கக் கூடும் என தகவல் வந்ததை அடுத்து சிறுவர்கள் பகுதி பகுதியாக மீட்கப்பட்டுள்ளனர்.   இவர்களில் அப்துல் சாம் என்னும் சிறுவன் ஒருவருக்கு மட்டுமே ஆங்கிலம் பேச தெரிந்துள்ளது.  அந்த சிறுவர்களைக் கண்ட இங்கிலாந்து நீச்சல் விரர்களுக்கு இவர் மூலம் தான் குழுவினர் செய்திகளை அனுப்ப முடிந்தது.

மியான்மரில் பிறந்த அப்துல் சாம் கிறித்துவ ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டவர் ஆவார்.  இவர் மீட்புப் படையினரிடம் ஆங்கிலத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.    அவர், “நான் அப்துல். நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்” என தொடங்கி தங்களின் நிலை பற்றி சுத்தமான ஆங்கிலத்தில் தெரிவிக்கிறார்.

அவருடைய தைரியத்தை மட்டுமின்றி அவரது ஆங்கிலப் புலமைக்காகவும் அனைவரும் புகழ்ந்துள்ளனர்.   அவருக்கு ஆங்கிலத்தை தவிர தாய், பர்மீஸ் மற்றும் சீன மொழியிலும் நன்கு பேச தெரிகிறது.   வடக்கு தாய்லாந்தை சேர்ந்த அவர் தனது கல்விக்காக தாய் தந்தையரை பிரிந்து ஒரு தேவாலயத்தில் வசித்து வருபவர் ஆவார்.

அவர் வசித்து வந்த வா என்னும் பகுதி தனி மாநிலமாக அறிவித்துக் கொண்ட பகுதி ஆகும்.   ஆனால் அந்த பகுதி மியான்மர் அங்கீகரிக்காததால் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரம் வா வுக்கு கிடையாது.  அடிக்கடி வா பகுதி புரட்சியாளர்களுக்கும் மியான்மர் ராணுவத்துக்கும் இடையில் நடக்கும் போரினால் சுமார் 4 லட்சம் மக்கள் இந்த அகுதியில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு நாடில்லாத ஒரு குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் சாம் என்பது குறிப்பிடத்தக்கது.  அவரை தேவாலய பாதிரியார்களும் பள்ளி அசிரியர்களும் மிகவும் புகழ்கின்றனர்.   பள்ளியின் முதல்வர், “அவர் ஒரு மாணவ மாணிக்கம்.  கால்பந்து விளையாட்டிலும், படிப்பிலும் முதல் இடத்தை பிடிப்பவர் எப்போதும் அப்துல் சாம் தான்.   அவர்  தனது விளையாட்டுத் திறமையாலும் கல்வித் திறனாலும் பள்ளிக்கு புகழையும் பல பரிசுகளையும் பெற்றுத் தந்தவர்” என கூறி உள்ளார்.