சென்னை:

முன்விரோதம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜெயஸ்ரீ உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம்  நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்,   ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த திரு. ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.5.2020 அன்று முருகன் மற்றும் கலிய பெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.5.2020) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த குற்றவாளிகள் மீது திருவெண்ணை நல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கொடூர செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும்.
உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு  கூறியுள்ளார்.