‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’: தமிழில் பிழை இருந்தது உண்மை! அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

சென்னை:

குஜராத்தில் பட்டேல் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த  அறிவிப்பு பலகையில், தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என்று பிழையாக எழுதப்பட்டிருந்தது உண்மைதான் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

பட்டேல் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்  ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என்று பிழையாக தமிழில் எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த எழுத்து அழிக்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற ஒரு அறிவிப்பு பலகை வைக்கவில்லை என்று குஜராத் முதல்வர் அறிவித்தார்.

ஆனால், பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர், பிழை இருந்தது உண்மை என்று  கூறி உள்ளார்.

குஜராத் மாநிலம் நர்மதை நதிக் கரையில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) என்று அழைக்கப்படும் இந்த சிலை உலகின் மிக உயரமானதாகக் கருதப்படுகிறது.

கடந்த மாதம்  31ம் தேதி விமரிசையாக நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி சிலையை திறந்த வைத்தார். விழாவில் தமிழக அரசு சார்பில் மா.பா.பாண்டியராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

பிழை காரணமாக தமிழ் எழுத்து அழிக்கப்பட்ட நிலையில் இருந்த அறிவிப்பு பலகை

இந்த சிலை வளாகத்தில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் ‘Statue Of Unity’ என்பதை பல மொழிகளில் மொழி பெயர்த்து எழுதப்பட்டிருந்தது. அதில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட பெயர் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

‘ஒற்றுமையின் சிலை’ என்பதற்குப்ப பதில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என இருந்தது. இது பற்றி படத்துடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.

அதைத்தொடர்ந்து இது தொடர்பாக முதலில் குஜராத் முதல்வர் ஏற்கனவே  தனது டிவிட்டர் பக்கத்தல் பதிவிட்டிருந்த படங்களை நீக்கிவிட்டு,  ”அப்படியொரு பெயர்ப் பலகையே படேல் சிலை வளாகத்தில் வைக்கப்படவில்லை” என குஜராத் அதிகாரிகள் கூறினர்.

இதுவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குஜராத் முதல்வரின் டிவிட்டர் பதிவை வெளியிட்டு  பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என்று  தமிழ் பிழையாக எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். இதற்கான பணியில் பல தமிழர்கள் இருந்தும் தவறு நடந்திருக்கிறது துரதிருஷ்டவசமானது என்றவர்,  தமிழ் மட்டுமின்றி மூன்று மொழிகளில் பிழை இருந்துள்ளது என்று கூறினார்.

குஜராத் முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு

இந்த பிழை குறித்து, அசிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் தலைவரிடம் பேசியதாகவும் தமிழ்ப் பெயரில் பிழை இருந்தது உண்மைதான் என்பதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் வருகை தருவதை முன்னிட்டு படேல் சிலை வளாகம் முழுதும் பாதுகாப்பு வளையத்துக் குள் வந்துவிட்டதால் தவறைத் திருத்த முடியவில்லை என்ற அமைச்சர், தவறாக தமிழ்ப் பெயர் எழுதப்பட்ட பெயர்ப் பலகை தற்போது அகற்றப்பட்டுவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.