ஊரடங்கால் ரூ.35000 கோடி வருவாய் இழப்பு என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

--

சேலம்: கொரோனா ஊரடங்கால், தமிழகத்திற்கு ரூ.35000 கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அதேசமயத்தில், இந்த நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சேலத்தில் அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா ஊரடங்கால் தமிழக அரசுக்கு சுமார் ரூ.35000 கோடிக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அரசு கேட்ட தொகையை மத்திய அரசு தரவில்லை. ஆனால், நிலைமையை சமாளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், வளர்ச்சி திட்டங்கள் பாதிக்காத வகையில் மாநில அரசு செயல்படும்.

மாநிலமெங்கும் மொத்தம் 3.85 லட்சம் மக்கள், இதுவரை, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதில், 14853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 7524 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் 67 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்னன. அவற்றில் 27 மையங்கள் தனியாருடையவை. இந்தியாவில் இது அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. வெளிமாநிலங்களிலிருந்து வரும் நபர்களில், ஒரு நாளைக்கு சுமார் 13000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.