ஆமதாபாத்: 

வறட்சி காரணமாக தற்கொலை செய்த விவசாயிகள் எண்ணிக்கையில்,  தமிழகம் எட்டாவது இடத்திலும் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவுகிறது.

இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக வாங்கிய கடனை திருப்பித்தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரமின்றி வறுமையில் சிக்கிய விவசாயிகளில் பலர் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது.

இந்த நிலையில்,குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த, பாரத்சிங் ஜாலா என்பவர், நாட்டில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட  இழப்பீடு குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த பட்டியலை  உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

கடந்த, 2013 – 2015  காலகட்டத்தில் நாடுமுழுதும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சகம்  அதில் தெரிவித்துள்ளது. இந்த தற்கொலை பட்டியலில், மஹாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் எட்டாவது இடத்திலும் உள்ளன.

மஹாராஷ்டிராவில், 11 ஆயிரத்து, 441 விவசாயிகளும்; கர்நாடகாவில், 3,740 விவசாயிகளும்; ம.பி.,யில், 3,578 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

தெலுங்கானாவில், 2,747 பேர்; சத்தீஸ்கரில், 2,152 பேர்; ஆந்திராவில், 2,014 பேர்; கேரளாவில், 1,989 பேர்; தமிழகத்தில், 1,606 பேர், குஜராத்தில், 1,483 பேர், உ.பி.,யில், 1,266  பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.