ஜிஎஸ்டி இழப்பீடு – 2 வாய்ப்புகளில் ஒன்றை தேர்வுசெய்ய மாநிலங்களுக்கு 7 நாட்கள் கெடு!

புதுடெல்லி: கொரோனா பரவலால், ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில், மாநிலங்கள் 2 வழிகளில் ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாம் என்று பேசியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு ஏற்பாட்டின்படி, நியாயமான வட்டியில், மாநிலங்கள் ரூ.97000 கோடி கடன் பெற்றுக்கொள்வது மற்றும் ரிசர்வ் வங்கியிடம் கலந்தாலோசனை செய்து, 2021 நிதியாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.2.35 கோடி இழப்புத் தொகையை கடன் பெற்றுக் கொள்ளுதல் என்ற இரண்டு வகையான வாய்ப்புகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர்.

இந்த வாய்ப்புகள் தொடர்பாக கலந்தாலோசனை செய்து, இறுதி முடிவெடுக்க மாநிலங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டில் ஒன்றை மாநிலங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.

“கடனுக்கான வட்டியானது, ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தலில் இருந்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு வசூலிக்கப்படும் வரியிலிருந்து செலுத்தப்படும். மாநிலங்களின் மீது கூடுதல் சுமை இருக்காது” என்றும் கூறினார் நிதியமைச்சர்.