சென்னை

டந்த மூன்று வருடங்களில் ஆன்லைன் மோசடியில் அதிக பணம் இழந்த மாநிலங்கள் குறித்து  விவரங்கள் வெளியாகி உள்ளன.

வங்கிகளில் ஆன்லைன் மோசடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மோசடி தற்போது மிகவும் அதிகரித்து வருகின்றன.  சமீபத்தில் பெங்களூரு நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த இரு பல்கேரிய நாட்டினர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யபட்டனர்.   அவர்களிடம் இருந்து கார்டுகளில் உள்ள காந்த தகடுகளின் (MAGNETIC  STRIP)  திருடப்பட்ட விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் பலருக்கு அழைப்புக்கள் வந்துள்ளன.  அதில் பேசுபவர் நல்ல தமிழில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் கார்டுகள் அல்லது இணைய வங்கி பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளனர்.    இதன் மூலம் பல இடங்களில் மோசடிகள் நடந்துள்ளன.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் கடந்த வாரம் விவரங்கள் வெளியிட்டுள்ளது.   அதன்படி ஏடிஎம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் இண்டர்நெட் பரிவர்த்தனைகள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக அளவு மோசடி நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.   தமிழ்நாட்டில் அதிக விழிப்புணர்வு மற்றும் அதிக அளவில் படித்துள்ளவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு நல்ல வசதியான மாநிலமாக உள்ளதாகவும் பலரிடம் சேமிப்பு நிறைய உள்ளதால் ஏமாற்றுபவர்களும் இங்கு அதிகம் இருப்பதாக ஓய்வு பெற்ற ஒரு காவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.  தற்போது ஒரு புதிய செயலி ஒன்று அமைக்கப்பட்டு அதை உபயோகப்படுத்துபவரகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் அதன் மூலம் திருடப்ப்டுவதையும் அவர் சுட்டிக் காட்டிஉள்ளார்.

மக்கள் சற்றே விழிப்புடன் இருந்தால் இந்த மாதிரியான மோசடிகளை தவிர்க்க முடியும் என பல ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.