எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தான் வேண்டும், பாராட்டு அல்ல: மத்திய அரசை சாடும் கேரள அமைச்சர்

திருவனந்தபுரம்: எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தேவை, பாராட்டு அல்ல என்று கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி இருக்கிறார்.

கொரோனா பாதித்த மாநிலமான கேரளா, மிக சிறப்பாக செயல்பட்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறது. கேரள அரசின் செயல்பாடுகளுக்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மத்திய அரசும் கேரளாவை பாராட்டி இருக்கிறது. ஆனால் எங்களுக்கு பாராட்டுகள் வேண்டாம், நிதி உதவி வேண்டும் என்று கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தற்போதைய நெருக்கடியான நிலையில் வங்கிகள் அதிக வட்டி வசூலிக்கின்றன, மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி உதவியை எதிர்பார்க்கின்றன, பாராட்டு மட்டுமல்ல. பிரதமர், தமது உரையில், தொற்றுநோயை திறம்பட கையாண்டதற்காக மாநிலங்களை பாராட்டினார். மாநிலங்களுக்கு பாராட்டு மட்டும் தேவையில்லை, ஆனால் நிதி உதவி தேவை என்று நான் நினைக்கிறேன்.

கடன்களுக்காக வங்கிகளை அணுகும்போது, ​​வட்டி விகிதம் 9 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்கள் கடன் வாங்குவதை ரூ.500-1000 கோடியாக மட்டுப்படுத்தியுள்ளன, மேலும் சம்பளத்தை குறைத்தும், பிற வளர்ச்சி நடவடிக்கைகளையும் நிறுத்தத் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு 4 நாட்களுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருவது போல் தெரிகிறது. இது பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி லாக்டவுன் தான். கடந்த 3 வாரங்களில் பல படிப்பினைகளை கற்றுக் கொண்டோம்.

விரிவான பரிசோதனைகள் இன்றி எந்த லாக்டவுனும் பயனுள்ளதாக இருக்காது. 2வதாக, வருமானம் இன்றி நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாக் டவுனை ஏற்க மறுத்து, சொந்த மாநிலங்களுக்கு செல்ல முயற்சிக்கின்றனர்.

ஒரு வாரத்திற்கு மேலாக புதிய தொற்றுகள் இல்லாத, நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு இருந்தால் அந்த மாவட்டங்களில்  கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என்று கூறினார்.