புலம் பெயர் தொழிலாளர் ரயில் கட்டணத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் : குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி 

கமதாபாத்

புலம்பெயர் தொழிலாளர் ரயில் கட்டணத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் அல்லது ரயில்வே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் சுமார் 11.5 புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களில் இருந்து வந்து பணி புரிகின்றனர்.   இவர்கள் அதிக அளவில் கரும்பு தொழிற்சாலைகள், விசைத் தறிகள் மற்றும்  வைரத் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.  இவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப இந்திய ரயில்வே ஷார்மிக் ரயில் எனப்படும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரை 8,08,294 புலம் பெயர் தொழிலாளர்கள் அகமதாபாத், சூரத், வடோதரா, ராஜ்கோட், காந்திதாம், பாருச், பாவ்நகர், மோர்பி, பாலன்பூர், வல்சாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்றுள்ளனர்.  இதில் கடந்த 19 ஆம் தேதி வரை வடோதராவில் இருந்து மட்டும் 205 ரயில்களில் 3,06,131 பேர் சென்றுள்ளனர்.  இந்த மாத இறுதிக்குள் சுமார் 1.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர் மட்டுமே சூரட் நகரில் இருப்பார்கள்.  இவர்களுக்கு ஏற்கனவே பணி புரிந்த இடங்களில் பணி மீண்டும் கிடைத்துள்ளது.

இவ்வாறு சொந்த ஊருக்குத் திரும்பும் தொழிலாளர்களின் ரயில் கட்டணம் குறித்துப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.  இவர்களுக்கு ரயில் கட்டணத்தை மாநில அரசு அளிக்க வேண்டும் என அளிக்கப்பட்ட உத்தரவுக்கு பல இடங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.  ஆகவே இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் ஆனந்த் யக்னிக் உள்ளிட்ட பலர் பொது நல மனுக்களை குஜராத் உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.

இதற்கு அரசு அறிவித்த அறிக்கையில் “மாநிலங்களுக்கிடையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர் சட்டம் 1979 இன படி மொத்தம் 7512 தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  ஆனால் மாநிலத்தில் மொத்தம்22.5 லட்சம் புலம் பெயர் தொழிலாளர் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் தாங்களாகவே பிழைப்பு தேடி வந்தவர்கள்.  எனவே இந்த சட்டத்தின் படி இவர்களுக்குப் பயண கட்டணம் உள்ளிட்டவற்றை அரசு ஏற்க முடியாது.

மாவட்ட அளவில் பல சமூக சேவை நிறுவனங்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும்  ரயில் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை ஏற்க முன் வந்துள்ளன.  உத்தரப்பிரதேசம், ஒடிசா, தமிழகம் போன்ற மாநிலங்களில் கட்டணத்தை ரயில்வேக்கு நேரடியாக அளித்து விடுவதாக அறிவித்துள்ளன.  எந்த ஒரு புலம்பெயர் தொழிலாளியும் ரயில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காகச் சொந்த ஊர் செல்வதில் இருந்து தடுக்கப்படவில்லை”: என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த பதிலில், “புலம்பெயர் தொழிலாளர்களை தற்போதுள்ள கொரோனா  பாதிப்பு நிலையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.  எனவே மாநில அரசுகள் அவர்களுக்கான ரயில் கட்டணத்தை ஏற்க வேண்டும்.  அப்படி இல்லையெனில் ரயில்வே இந்த கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்”என அறிவிக்கப்பட்டுள்ளது.