டில்லி

ரும் 18 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் மாநிலங்கள் ஜிஎஸ்ட் இழப்பீடு நிலுவை குறித்தும் இழப்பீட்டுக் காலத்தை நீட்டிக்கவும் கேட்டுக் கொள்ள உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சுமார் இரண்டரை ஆண்டுகளாக ஜிஎஸ்டி அமலாக்கத்தில் உள்ளது.  ஒரு நாடு ஒரே வரி என்னும் கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்த வரிக் கொள்கையால் பல மாநிலங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது.  அதையொட்டி 2021-22 ஆம் வருடம் வரை மாநிலங்களுக்கு ஜி எஸ் டி வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை இழப்பீடாக வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

ஆனால் கடந்த சில மாதங்களாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி எஸ் டி இழப்பீடு தொகை அளிக்கப்படாமல் உள்ளது.  இது குறித்து பஞ்சாப், டில்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உடனடியாக இந்த நிலுவைத் தொகையை வழங்குமாறு நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது.

இந்த வருடம் ரூ.6,66,343 கோடி ஜிஎஸ்டி வருமானம் வரும் என அரசுத் திட்டம் தீட்டி இருந்தது.  ஆனால் கடந்த 9 மாதங்களாக இதில் 50% மட்டுமே வருமானம் வந்துள்ளது.  மீதமுள்ள மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படும் அளவுக்கு வருமானம் கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது.  மேலும்  இழப்பீட்டுக்காக வரும் ரூ.1,09,343 கோடியில் இதுவரை ரூ.64,528 கோடி வருமானம் மட்டுமே கிட்டியுள்ளதால் இழப்பீட்டை வழங்க இயலவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே வரும் 18 ஆம்தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் நிலுவைத் தொகை பற்றி விவாதிக்க மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன.  இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் அவர் இழப்பீட்டுக்கான காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சத்தீஸ்கர் அரசு வட்டாரங்கள், “சத்தீஸ்கர் மாநிலம் ஒரு உற்பத்தி மாநிலம் என்பதால் இழப்பீடு தாமதமாகக் கிடைப்பது மிகவும் சிரமம் தருவதாக உள்ளது.  அரசு நாளுக்கு நாள் ஜிஎஸ்டி வருமானம் குறைந்து வருவதாகக் கூறப்படுவதால் மாநில வருமானமும் குறைய வாய்ப்பு உள்ளது.  எனவே நாங்கள் இந்த இழப்பீடு அளிக்கும் காலத்தை 2021-22லிருந்து 2026-27 வரை நீட்டிக்கக் கேட்டுக் கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளன.

சத்தீஸ்கர் மாநில வருமானத்துறை மூத்த அதிகாரி ஒருவர், “ஜிஎஸ்டி வழங்கும் காலத்தை நீட்டிக்க நாங்கள் விடுக்கும் கோரிக்கைக்கு அரசு விரைவில்  பதில் அளிக்க வேண்டும்.  இல்லையெனில் நாங்கள் அனைத்து மாநிலங்களும் இணைந்து இந்த கால கட்டத்தை நீட்டிக்கத் தீர்மானம் இயற்றக் கோரி சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.