சிலை கடத்தல் வழக்கு: ரன்வீர்ஷா, கிரண்ராவுக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை:

சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, அதில் சம்பந்தப்பட்டுள்ள  ரன்வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, அவர்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நீதி மன்றம்  உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வந்த சிலை கடத்தல் மற்றும் மாற்றப்பட்டது தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சென்னை உயர்நீதி மன்றம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

அதைத்தொடர்ந்து பொன்மாணிக்க வேல் நடத்திய அதிரடி விசாரணையில், சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ்  வீட்டில் நடைபெற்ற சோதனையிலும் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டது.

இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்படலாம் என அச்சத்தில் தலைமறைவாகி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மீது நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பில், இருவரும் பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும் என்றும்,   மண்ணின் பொக்கிஷங்களை சூறையாடும் காலம் முடிந்து விட்டது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும்,  கோயில் சிலைகளை திருடும் எண்ணம் இனி யாருக்கும் வராது என்ற நீதிபதிகள்,  திருச்சி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்கில் ரன்வீர்ஷா, கிரண்ராவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினர்.

மேலும்,  திருச்சி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் தினமும் இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது.