உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும்! பொன்.மாணிக்க வேல் ஓய்வு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை விசாரித்து வரும், பொன்மாணிக்க வேலின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள ஏராளமான சிலைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கில், ஐ.ஜி. பொன்மாணிக்க வேலை சென்னை உயர்நீதி மன்றம், சிறப்பு அதிகாரியாக நியமித்து விசாரணை நடத்தி வருகிறது. பொன்.மாணிக்க வேல் கடந்த ஆண்டே ஓய்வுபெற்ற நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில், அவரது பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு எக்ஸ்டென்ட் செய்யப்பட்டது. அதன்படி, வரும் 30ஆம் தேதியோடு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில், தமிழகஅரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொன்மாணிக்க வேலின் பதவிக்காலம் முடிவடைவதால்,  சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் ஆவனங்களை   சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோரியிருந்தது.

இந்த மனுவை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.சா அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி,  இந்த வழக்கில் தற்போது, எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்றும், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை பொன்.மாணிக்க வேல் அவரது உயர்அதிகாரியான  ஏ.டி.ஜி.பி.யிடம்  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், சிறப்பு அதிகாரி பதவியில் தொடர்ந்து நீடிப்பதா? ஓய்வுபெறுவதா? என்பதை பொன்.மாணிக்கவேலே முடிவு செய்யட்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு, சிலை கடத்தல், சிலை திருட்டு  தொடர்பான அனைத்து வழக்கு பதிவுகளையும் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (ஏடிஜிபி) அபய் குமார் சிங்கிடம் ஒப்படைப்பது குறித்து மாநில அரசும் சிறப்பு அதிகாரியும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு காத்திருக்க வேண்டும் என்று கூறினர்.