கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குநர் விஜயநிர்மலாவுக்கு ஐதராபாத்தில் சிலை…!

பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடலில் ஆடி நடித்த விஜயநிர்மலாவை நாம் மறந்திருக்க மாட்டோம்.

எம்ஜிஆரின் என் அண்ணன் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்த இவர் இதுவரை சுமார் 200 படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

விஜயநிர்மலா இதுவரை 44 படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதனால் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயநிர்மலா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் இன்று நடிகை விஜய நிர்மலாவின் 74 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. திரையுலகில் அவரின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் நடிகை விஜய நிர்மலாவிற்கு ஐதராபாத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.