பெங்களூர்,

டிஎம் இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி வந்த வெளிநாட்டினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் சர்வதேச  கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சமீப காலமாக ஏடிஎம் இயந்திரம் முலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களுரில் ஏர்போர்ட் ஏடிஎம் உள்பட பல ஏடிஎம் இயந்திரங்களில், ஏடிஎம் கார்டு உபயோகப்பத்துவோர் தகவல்கள் திருடு போயுள்ளதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் பொருத்தி தகவல்கள் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக கர்நாடக மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் இரண்டு வெளிநாட்டினரை கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஹங்கேரியன், மற்றொருவர் ரோமானியர் என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. கைது செய்யப்பட்ட ரோமானியன் பெயர் டான் சபின் (வயது40) என்பதும், ஹங்கேரியன் பெயர் ஜனோஸ் (வயது 44).

இவர்கள் பல ஏடிஎம்களில், ஏடிஎம் கார்டு எண் மற்றும் அதற்கான பின் எண்ணையும் திருடி வெளிநாட்டுக்கு அனுப்பி  உள்ளது தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் டூரிஸ்ட் விசா மூலம் கடந்த செப்டம்பர் 1ந்தேதி இந்தியா வந்துள்ளனர். வரும் 19ந்தேதி இங்கிருந்து திரும்பவும் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் தகவல்கள் திருடப்பட்டு, அந்த எண் மூலம் பண பரிமாற்றம் நடைபெற்றதை தொடர்ந்து, இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசார் நடத்தி வந்த விசாரணையில், இதுபோன்ற திருட்டு செயல்களில் ஈடுபட்டு வருவது  ரோமானிய கும்பல் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக  27 வயதான  காபிரியேல் மரியான் என்ற ரோமானிய இளைஞர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் கேரள போலீசார் நடத்திய அதிரடி விசாரணையின் தொடர்பாக, ரோமானியர்கள் கும்பல் கார்டு ஸ்கிம்மர்ஸ் மூலம் ஏடிஎம் உபயோகப்படுத்தும் நபர்களின் கார்டு எண் மற்றும் பின் எண்களை திருடி, அதே எண்ணில் புதிய கார்டுகள் தயாரித்து உபயோகப்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் சைபர் கிரைம் சிஐடி நடத்திய விசாரணையில், 8 ஏடிஎம் இயந்திரங்களில் பெங்களூர் கெம்பேகவுடா ஏர்போர்ட் ஏடிஎம் உள்பட 8 ஏடிஎம் இயந்திரங்களில் தகவல்கள் திருடியிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கர்நாடக போலீசார் ஏற்கனவே புலன் விசாரணை நடத்தி வந்த நிலையில், எம்.ஜி.ரோடு கோடக் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில், ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்ட தகவல்கள் தெரிய வந்தது.

அது தொடர்பான சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஏடிஎம்-ல் தகவல் திருடும் கும்பலை சேர்ந்தவன், ஒரு சிறிய காமிராவை மற்றும் ஸ்கிம்மர் மெஷினை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தியது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து, திருட்டு கும்பலை பிடிக்க அந்த ஏடிஎம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

ஒரு வாரம் கழித்து அந்த ஸ்கிம்மர் மெஷின் மற்றும் காமிராவை எடுக்க நள்ளிரவில் வந்தபோது அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அந்த இருவரும் அதிகாலை வேளைகளில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் பொருத்தி வந்ததும், பின்னர்  திருடப்பட்ட தகவல்களை  சேமித்து வைத்திருந்த மெமரி கார்டுகளை மாற்றுவதற்காக நள்ளிரவில் மீண்டம் ஏடிஎம் வந்து எடுத்து செல்வதும் தெரிய வந்தது.

இவ்வாறு திருடப்படும் தகவல்களை,என்கிரிப்ட் செய்து  இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதாகவும், அதன்வாயிலாக, பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் இருந்துபணத்தை திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது என்றும்,

இந்த சர்வதேச கும்பலை பிடிக்க இன்டர்போல் வழியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறது என்று கர்நாடக டிஜிபி கூறியுள்ளார்.

 

இதுபோன்ற திருட்டு கும்பல் அமெரிக்கா, மெக்சிகோ, கவுதமாலா, ஜமைக்கா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், அர்ஜென்டினா, உருகுவே போன்ற நாடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.