டில்லி

னாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தண்ணீர் குழாய்களை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஜனாதிபதி மாளிகையின் வெளிப்புறப்பகுதியில் தற்போது தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த பணி அமைக்கும் பணியை அருண் ஜெயின் என்பவரின் நிறுவனம் செய்து வருகிறது.  இந்த பணிக்காக இரும்பு குழாய்கள் ஜனாதிபதி மாளிகையில் 23 மற்றும் 24 ஆம் எண் நுழைவாயில் அருகில் வைக்கப்பட்டிருந்தன.  இவற்றில் சில குழாய்கள் காணாமல் போய் விட்டன.

இதையொட்டி அருண் ஜெயின் சாணக்கிய புரி காவல்நிலையத்தில் சுமார் 20 முதல் 22 குழாய்கள் காணாமல்  போனதாகப்  புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தனர்., அதில் ஸ்விஃப்டி டிசைர் காரில் வந்த சிலர் அங்கிருந்து குழாய்களை எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

அதையொட்டி அந்த காரை காவல்துறையினர் தேடி வந்தனர்.  அந்த காரை கண்டுபிடித்து அசாம்கர் பகுதியில் வசிக்கும் அஜய் என்னும் 31 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.   அவரிடம் நடந்த விசாரணையில் தனது கூட்டாளிகளான மிதிலேஷ், ராகேஷ் திவாரி, குட்டு கான் ஆகியோரைப் பற்றித் தெரிவித்தார்.

அவர்களைக் கைது செய்த காவல்துறை நடத்திய விசாரணையில் தாங்கள் குழாய்களைத் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.   அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.  நீதிபதி அஜய்யை காவல்துறை பாதுகாப்பில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மற்றவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.