ஸ்டீபன் அத்வானி!: எச்.ராஜாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

சென்னை,

பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்த நாள் நேற்று (நவம்பர் 8ந்தேதி) கொண்டாடப்பட்டது. அவருக்கு பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள், தொண்டர்கள் உள்பட எதிர்க்கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் எச்.ராஜா, தான் டுவிட்டர் மூலம் பதிவிட்ட வாழ்த்து செய்தியில் ஸ்டீபன் அத்வானிஜி என்று குறிப்பிட்டுள்ளார். இதையறிந்த நெட்டிசன்கள் ராஜாவின் பதிவு குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

நேற்று தனது 90வது பிறந்தநாளை  கொண்டாடிய  எல்.கே.அத்வானி என்று அழைக்கப்படும்  லால் கிருஷ்ண அத்வானி, பிறந்த நாளை யொட்டி  டில்லியில் தனது அவரது இல்லத்தில் பார்வை குறைபாடு உள்ள 90 குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

பிரதமர் மோடியும் டுவிட்டர் வாயிலாக  அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவுடன் நேரில் சென்றும் வாழ்த்து கூறினார்.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த பாஜ தேசிய செயலாளரான எச்.ராஜா தனது டுவிட்டர் வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்திருந்த வாழ்த்து செய்தியில், ஸ்டீபன் அத்வானிஜி என்று குறிப்பிட்டிருந்தார். இதை கண்ட நெட்டிசன்கள் சமூக வலைதளங்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே மெர்சல் படம் குறித்து சர்ச்சையை உருவாக்கிய ராஜா, அவரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு, மத ரீதியிலான சர்ச்சையை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தற்போது அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதவில் ஸ்டீபன் அத்வானிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருப்பது, லால் கிருண்ஷ அத்வானியை ஸ்டீபன் அத்வானியாக மாற்றி விட்டார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
எச்.ராஜா வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்ப இதுபோல் பதிவிடுகிறாரா அல்லது, தவறுதலாக, காப்பி பேஸ்ட் செய்தபோது இந்த பிழை ஏற்பட்டதா என்பது குறித்து ராஜாதான் விளக்கம் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.