கொரோனா தடுப்பு மேலாண்மை – கவனிக்கத்தக்க சில அம்சங்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய சிறப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், கொரோனா தாக்கம் மோசமாவதை இந்தியாவில் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

1. கோவிட் 19 வைரஸ் தொடர்பான பரிசோதனை வசதிகளை விரிவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிகுறிகள் கொண்ட, குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று வருவோர்களுக்கானதாக மட்டும் இருத்தல் கூடாது.

2. அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தும் வகையிலான, பொது மருத்துவ சேவை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். அதாவது, அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் தனி வார்டுகள் உள்ளிட்ட வசதிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் செய்யப்பட வேண்டும்.

3. கொரோனாவுக்கான மருத்துவ வசதிகள் அன‍ைத்தும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அதில் தனியார் மருத்துவமனைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். இந்த கட்டுப்பாட்டு மையமே, கொரோனா தொடர்பான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வ‍ேண்டுமே தவிர, வழக்கமான சந்தை மெக்கானிஸம் மூலமாக அல்ல.

4. ஒருங்கிணைந்த நோய் பரிசோதனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஒவ்வொரு பருவ நிலையிலும் வரும் நோய்கள் குறித்த தெளிவான மற்றும் விரைவான தகவல் பரிமாற்ற செயல்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், அரசு – தனியார் மருத்துவ துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

5. நீண்டகால திட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், நோய் கட்டுப்பாட்டிற்கான அரசு மையத்தை நிறுவ வேண்டும். இதன்மூலம் நோய் பரவல் தொடர்பாக உடனடி எச்சரிக்கை சாத்தியப்படும்.

6. மருத்துவத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சரியான பணிச்சூழல் மற்றும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ‍இந்த வசதியை மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

7. தொற்றுநோய் தீவிரமாகப் பரவும் காலத்தில், பற்றாக்குறையான வளங்களைப் பகிரும் நடவடிக்கைகள் சரியான மதிப்பீட்டின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், மருத்துவ ஆய்வு மேம்பாடு மற்றும் தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட விஷயங்களில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பும் அவசியம்.

8. நோய் தொற்றும் காலங்களில், சமூகரீதியான கூடல்களை தவிர்ப்பது அவசியம். அதேசமயம், அவற்றை கட்டாயமான முறையில் அமல்படுத்தாமல், புரியவைப்பதின் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மதம், விளையாட்டு, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்டவை தொடர்பான கூடுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திப்போடப்பட வேண்டுமே தவிர, அவற்றை ரத்துசெய்ய வேண்டியதில்லை.

9. நோய் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, சமூக ஆதரவு வழங்கப்படுவதோடு, அவர்களின் தேவைகள் ஈடுசெய்யப்படுவதும் அவசியம்.

10. வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மக்களின் நடமாட்டங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தடைசெய்யப்படுகையில், அந்த நடவடிக்கை மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படும் வகையில் எதுவும் நிகழக்கூடாது.

11. தொற்றுநோய் பரவும் காலத்தில், முறையான ஊடக சுதந்திரம் என்பது பராமரிக்கப்பட வேண்டும். அதேசமயம், அரசு வகுத்திருக்கும் விதிமுறைகளுக்கேற்ப ஊடகங்கள் நோய் தொற்று குறித்த செய்திகளை வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

12. மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை, பொது சுகாதார பராமரிப்பை கவனத்தில் வைத்து மேற்கொள்வது முக்கியம். இத்தகைய சூழல்களில் சமூக விழிப்புணர்வு கல்வியானது மிகவும் முக்கியப் பங்கை ஆற்றுகிறது. இதுபோன்ற சமயங்களில், பொருளாதார நிலையில் அடித்தட்டில் இருக்கும் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

13. இதுபோன்ற நேரங்களில் பொது செலவினங்கள் அதிகரிக்கின்றன என்பது ஒரு முக்கியமான அம்சம். ஏனெனில், சமூகப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், பொதுமக்க‍ளைப் பாதுகாக்க, இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகிறது.