ஸ்டெர்லைட் விவகாரம்: அகர்வாலா குழுவுக்கு மதுரை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

மதுரை:

ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அமர்வால் தலைமையிலான குழுவுக்கு மதுரை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

14 பேரை பலிகொண்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை  தொடர்ந்து ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதையடுத்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகவர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

இந்த குழுவினர் கடந்த மாதம் தூத்துக்குடி வந்து சில பகுதிகளில் ஆய்வு நடத்தியும், அரசு அதிகாரிகளை சந்தித்து விட்டும் சென்றனர்.

இந்த நிலையில, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில், அகர்வால் குழு மக்களிடம் மேலும் 2 நாட்கள் கருத்து கேட்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சாதக பாதகங்களை ஆய்வு செய்யும் தருண் அகர்வாலா தலைமையிலான குழு, கடந்த  செப்டம்பர் 23-ம் தேதி சுமர்ர் 2 மணி நேரம் மட்டும் மனுக்களை பெற்றது. மனுக்கள் அளிப்பது குறித்து  முறையாக விளம்பரம் செய்யாததால், இதுகுறித்து பெரும்பாலான பொது மக்களுக்குத் தெரிய வில்லை என்றும், பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களையும் மூவர் குழு நேரடியாக பார்வையிடவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் பகுதி மக்கள் பங்கேற்கும் வகையில், 2 நாள்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த ஆணையிட வேண்டுமென மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தருண் அகர்வாலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.