தூத்துக்குடி:

கேன்சர், மூச்சுத்திணறல், சிறுநீரக பிரச்சினை  போன்ற பல்வேறு வகையான  உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் இன்று தூத்துக்குடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று மக்களின் போராட்டம் 64வது நாளாக தொடர்ந்து வருகிறது. நேற்று  பிரசித்தி பெற்ற பனிமய அன்னைப் பேராலயம் முன்பாக  கறுப்புக் கொடி ஏற்றி ஒரு தரப்பினர் தேவாலய வளாகத்திற்குள்  பந்தல் அமைத்து மணலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று  தூத்துக்குடி முழுவதும் அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடி  ஏற்றப்பபட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பெண்கள், சிறுவர்கள் என  அதிகளவில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் பல்வேறு கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஸ்டெலைட் ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாகன பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். நாளை மாலை கோவில்பட்டியில் இருந்து  இந்த வாகன பிரசாரம் தொடங்க உள்ளது. தொடர்ந்து எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் பகுதியில் வாகன பிரசாரம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 21, 22-ந்தேதி பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் வைகோ,  28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதுபோல டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தூத்துக்குடியில் நாளை மாலை பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகிறார்.