ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

ராமரிப்பு பணிகளுக்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க,தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதான விசாரணையை தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதி மன்றம், ஆலையை திறக்கவும் தடை விதித்தது. மேலும்,  தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என ஆணையிட்டது.

அதைத்தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் 27ந்தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை  சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் சத்திய நாரயணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் ஸ்டெர்லைட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரிமா சுந்தரம்,  பராமரிப்பு பணிகளுக்கு ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் நிர்வாகம், மொத்த முதலீடான, 3 ஆயிரம் கோடி ரூபாயை விட அதிகமாகவே, வருவாய் ஈட்டிவிட்டது.

மேலும்,  ஸ்டெர்லைட் ஆலையால் 28 ஆயிரம் அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர் மாசடைந்ததாலேயே, அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்று கூறினார்.

அப்போது  குறுக்கிட்ட நீதிபதிகள், தற்போது ஸ்டெர்லைட் ஆலை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அந்த ஆலை தூத்துக்குடி ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.

ஆலையில், அபாயகரமான பொருட்கள் இருப்பதால் ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்பது தான் மனுதாரரின் கோரிக்கை என நீதிபதிகள் கூறினர்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், அப்படி எதுவும் நடக்காது என்றும், ஒருவேளை ஏதாவது நிகழ்ந்தால் மாநில அரசு பொறுப்பேற்கும் என்றார்.

இதையடுத்து, வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.