Random image

அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

டில்லி:

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து, ஸ்டெர்லைட்  வேதாந்தா நிறுவனம் டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில்  வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வருகிறது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை எதிர்த்து அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த மே மாதம் 22ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக  13 அப்பாவி பொதுமக்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு   கடந்த மே மாதம் 28ம் தேதி அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.  இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில்  ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும்,  ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலையின்றி தவிப்பதாகவும், இதனால் பல குடும்பங்கள் வருமானம் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று  விசாரணைக்கு வருகிறது.