ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தூத்துக்குடி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்பாயம் நியமித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான  கமிட்டி இன்று  ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் 3 பேர் கொண்ட குழு இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வருகிறது.

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாளாகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது

இந்த கூட்டத்தில் அந்த பகுதியின் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அமைப்புகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த மே மாதம் 13ந்தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கய தேசிய பசுமை தீர்ப்பாயம் , ஆலையை திறப்பது  குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு மேகாலய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்கிறது.