ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: நீதிபதி அகர்வால் விசாரணை கமிஷனின் காலம் மேலும் நீட்டிப்பு

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்பாயம் நியமித்துள்ள மேகாலய உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அகர்வால் தலைமையிலான  கமிட்டியின் அவகாசம் நவம்பர் 30ந்தேதி வரை நீட்டித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த மே மாதம் 13ந்தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத் துக்கு அனுமதி வழங்கய தேசிய பசுமை தீர்ப்பாயம் , ஆலையை திறப்பது  குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தும், இந்த ஆணையம் 6 வாரத்திற்குள் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும்   உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து,  ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வால்  தலைமையில் 3 பேர் கொண்ட  குழுவினர் தூத்துக்குடி வந்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். அவர்களிடம்,  அந்த பகுதி யின் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அமைப்புகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தன.

தொடர்ந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்பட பலரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில்,  நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழுவின் கால அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 3 மாத கால அவகாசம் தர மறுத்த பசுமை தீர்ப்பாயம், மேலும்1 மாதம் நீட்டித்து  உத்தரவிட்டு உள்ளது.

இன்றை விசாரணையின்போது, நீதிபதி தருண்அகவால் விசாரணை குழுவின் கோரிக்கையை ஏற்று, விசாரணை குழுவின் கால அவகாசம் நவம்பர் 30ந்தேதி வரை நீட்டிப்பதாகவும், அன்றைய தினம், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.