ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை உயர்நீதி மன்றம் சிபிஐ விசா ரணைக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில்  தொடரப் பட்ட வழக்கில்,  சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்.  இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதி மன்றம் விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்த சிபிஐ,  துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம்  சிபிஐ விசாரணைக்கு  தடை விதிக்க மறுத்து வழக்கை ஒத்தி வைத்தது.