தூத்துக்குடி மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல!: மத்திய அரசு அதிர்ச்சி ஆதரவு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  . ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில்,  தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து நிலத்தடி நீர் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது சட்ட விரோதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே முழு அளவில் ஆய்வு நடத்தி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம்தான் காரணம் என உறுதி செய்யதாலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய அரசின் அறிக்கையை ஏற்று கொள்வதும், ஏற்று கொள்ளாததும் தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு தரப்பில் கூறப்பப்பட்டது. ;மேலும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த வழக்கை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை மீண்டும் நவம்பர்  19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.