அதிக மாசு ஏற்படுத்தும் 17ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று! சென்னைஉயர்நீதி மன்றத்தில் பரபரப்பான வாதம்….

சென்னை:

நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்  ஆலை தமிழக அரசால் கடந்தாண்டு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதீமன்றத்தை நாடியது. உச்சநீதி மன்றம் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகும்படி வேதாந்தா குழுமம்துக்கு உத்தரவிட்ட நிலையில், ஸ்டெர்லைட் மேல்முறையீடு வழக்கை நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் நிறுவனமே காரணம் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும், தமிழகஅரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் கூறியது.

அதைத்தொடர்ந்து பரபரப்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் பேராசிரியர் பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர்,  வைகையின் வாதத்துக்கு ஆட்சேபம் தெரிவித்த நிலையில், வைகை தொடர்ந்து வாதாடினார். அப்போது, நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து வாதாடியவர், ஸ்டெர்லைட்  விவசாய நில பகுதியில் ஆலை அமைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டியவர், அதுவே விதிமீறிய செயல் எனக் குறிப்பிட்டார். அதுபோல, நாட்டிலேயே  அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என ஏற்கனவே  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது சுட்டிக்காட்டியவர், ஸ்டெர்லைட் நிர்வாகமோ  மாசு ஏற்படுத்தவில்லை என தொடர்ந்து  தவறான தகவல்களை தெரிவித்து வருகிறது என்றும்  குற்றம் சாட்டினார்.

தொடக்க காலத்தில், தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு உடந்தையாக செயல்பட்டது துரதிருஷ்டவசமானது என்று கூறிய வைகை தொடர்ந்து  வாதம் செய்தார். அவரது வாதம் முடிவடையாத நிலையில், இன்றும் வாதம் தொடர்கிறது.