தூத்துக்குடி:
மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின்உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது.

இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் நிபந்தைகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கினால் மருத்துவமைகளுக்கு 1050 மெட்ரிக் டன் ஆக்சிசனை உற்பத்தி தருகிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததை அடுத்து அனைத்து கட்சி ஆலோசனையில் இந்த முடிவை முந்தைய அதிமுக அரசு எடுத்தது.

இந்நிலையில், மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அமைச்சர் பேசியதாவது, ” ஸ்டெர்லைட்டில் இருந்து வரும் 11ம் தேதி முதல், 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை 70 மெட்ரிக் டன்னாக உயர்த்தவேண்டும் என கேட்டுள்ளோம்.

அதற்கு 12ம் தேதி ஒரு முடிவு கிடைக்கும். அதுபோல, ஜேஎஸ்டபுள்யூ நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை 16 கிலோவாக உயர்த்தி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. என்எல்சியில் 3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிசிஎல்-யில் 300 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன்களை அங்கு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும்” என இவ்வாறு அவர் கூறினார்.