ஸ்டெர்லைட்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிரான மனு! உயர்நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதுரை:

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி  உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை அறிவித்துள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தர மாக மூடவலியுறுத்தி அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டக்களை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை காரணமாக 13 பேர் பலியான நிலையில்,  தமிழக அரசு ஆலையை மூட அரசாணை பிறப்பித்தது.

ஆனால், இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என கடந்த 15ம் தேதி உத்தரவிட்டது. இது அந்த பகுதியில் மீண்டும் போராட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.

இநத் நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தூத்துகுடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படுவதற்கு முன்பே,அன்றைய தினம் காலையிலேயே வேதாந்தா நிறுவன நிர்வாகிகள் தீர்ப்பை தங்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்து உள்ளது.

மேலும்,  மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.