சென்னை:

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறி 13 பேரின் உயிரை காவு வாங்கியது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைத்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சினை தமிழகத்தில் விவாதப் பொருளாக தொடர்ந்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் ஸ்டெர்லைட் பிரச்சினை எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு  கடந்த  2010-ம் ஆண்டு  ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக இருந்தபோதுதான்  நிலம் வழங்கப்பட்டது என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவை யில் நேற்று (வியாழக்கிழமை) பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க நானும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் தயாராக உள்ளதாக சவால் விடுத்தார்.

அதைத்தொடர்ந்து  இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீனவளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஒரு நாள் அல்ல ஒரு ஆண்டு முழுவதும் விவாதிக்க அதிமுக தயாராக இருப்பதாக தெரிவித்தார்”.