சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து, வரும் மே 15 முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆலையை ஆட்சியர் தலைமையிலான 6 பேர் கொண்ட கண்காணிப்பு குழு இன்று ஆய்வு நடத்தியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கை பற்றாக்குறை போன்றவற்றை அதேவையான அளவு இருப்பு கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக உயர்நிதிமன்றம் சூமோட்டோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கை  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது,   நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எந்த நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வரும் மே 15 முதல் 40மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும், என தகவல் தெரிவித்தார். இதேபோல புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாலா, புதுச்சேரியில் போதிய அளவில் ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் மே 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து,  ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் குழுவினர் இன்று ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.