சென்னை:

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று கலவரமாக மாறியது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து பேரணி நடத்தியதால், போலீசாருக்கும், போராட்க்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதன் காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

இந்நிலையில், போலீசாரின் அராஜகம் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

தூத்துக்குடியில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்றும்,  முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது  கூறி உள்ள ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்மீது போலீசார் தாக்குதல் நடத்தியது கண்டனத்துக் குரியது என்றும், இது மக்கள் விரோத செயல் என்றும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டியது அரசின் கடமை, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறான செயல் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:

ஸ்டெர்லைட்க்கு எதிராக மக்கள் அமைதியாக போராடிய போது அரசு அலட்சியம் செய்ததே காரணம் என்றும், அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டினார். போராடிய மக்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை என்றும், ஆனால் அவர்கள் தான் இறக்கிறார்கள் என்றும் கூறினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:

மக்களின் உணர்வை புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கி.வீரமணி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமாகா தலைவர் வாசன்:

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு பிரச்சினைக்கு நல்ல முடிவு ஏற்படுத்தி தர வேண்டும் என தமாகா தலைவர் வாசன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்:

போராட்டக்கார்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு  கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் எனவும் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து முதல்வரிடம் முறையி்டப்படும் என்றும் கூறினார்.

தூத்துக்குடி எம்எல்ஏ  கீதா ஜீவன்..

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தூத்துக்குடி மாவட்ட எம்எல்ஏ  கீதா ஜீவன் கூறி உள்ளார்.

இயக்குனர் கவுதமன்:

இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? என்று  இயக்குனர் கவுதமன் கேள்வி எழுப்பியுள்ளார். சொந்த மக்களை சுட்டுக் கொள்வதற்கு பெயர் தான் அரசா?. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் மேலும் ஆயிரங்கணக்கான மக்கள் ஈடுப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.