தூத்துக்குடி:

கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவ காரணமாக இருந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி பகுதி மக்கள்  கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு இரவு நேரங்களில் சரக்குகள் அனுப்பப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் இன்று சரக்கு கையாளும் ஷீபூல் (Seapool) நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மக்களின் போராட்டம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள், பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இயங்க  தமிழக மாசு கட்டுப்பாடு வாரியமும் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் இயங்க தேவையான தாமிர தாது  மூலப்பொருட்கள் கோல்டன் கிராப்ட் என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமார்ன  12 ஆயிரம் டன் அளவிலான  இந்த மூலப்பொருட்கள் கப்பலில் இருந்து  ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தூத்துக்குடியைச் சேர்ந்த ஷீபூல்  என்ற சரக்கு கையாளும் நிறுவனம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் அந்த  நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த நிறுவனத்துக்கும்,   துறைமுகம் பகுதியிலும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.