ஜமைக்கா: ஆஸ்திரேலியாவின் மைசமண்ட்ஸுக்கு நான் ‘அவுட்’ தர மறுத்தது மற்றும் இந்தியாவின் டிராவிட்டிற்கு ‘அவுட்’ தந்தது உள்ளிட்ட தவறுகளால் இந்தியா தோற்க நேர்ந்தது என்று தனது தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார் 2008ம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய இந்திய – ஆஸ்திரேலிய போட்டிக்கு நடுவராக இருந்த ஸ்டீவ் பக்னர்.
இந்தப் போட்டியில்தான், சைமன்ட்ஸை குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதாகவும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் சைமன்ட்ஸ் முதல் இன்னிங்ஸில் 30 ரன்களுக்கு அவுட்டாக, அதை மறுத்தார் ஸ்டீவ் பக்னர். இதனால் அவர் நிலைத்து நின்று 162 ரன்களை எடுத்தார். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிட் 38 ரன்கள் எடுத்தபோது, அவருக்கு தவறான அவுட் கொடுத்தார் பக்னர். இதனால் இந்திய வெற்றி பறிபோனது.
தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தவறை ஒப்புக்கொண்ட பக்னர் கூறியுள்ளதாவது, “ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனை(சைமன்ட்ஸ்) சதமடிக்க அனுமதித்தது தவறு. அடுத்து, போட்டியின் ஐந்தாவது நாளில் இந்தியாவின் வெற்றியை(டிராவிட்டின் அவுட்) பறித்தது இரண்டாவது தவறு.
அந்த 2 தவறுகள் என்னை அச்சுறுத்துகின்றன. ஆடுகளத்தில் சத்தமாக காற்று வீசுகையில், நடுவர்களால் சரியாக கேட்க முடியாது. ஆனால், ஸ்டம்ப் மைக் மூலமாக வர்ணனையாளர்களுக்கு பந்து பேட்டில் படும் சத்தம் நன்றாக கேட்கும். ஆனால், இந்த விஷயம் ரசிகர்களுக்குத் தெரியாது” என்றுள்ளார்.