சிட்னி: நடப்பு ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஜீனியஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

ஆஷஸ் தொடர் 4வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து இங்கிலாந்தை மிரட்டினார் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அவருக்கும் வார்னருக்கும் 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித், ‍டெஸ்ட் போட்டியில் தனது உடல்திறனை உடனடியாக நிரூபித்தார்.

தற்போது இரட்டை சதம் அடித்திருப்பதன் மூலம் தனது பேட்டிங் சராசரியை 147.25 என்பதாக அதிகரித்துக் கொண்டுள்ளார். ரிக்கிப் பாண்டிங் கூறியதாவது, “இதுவொரு நம்பமுடியாத விஷயம். ஆட்டத்தில் அவரின் கவனம் மெச்சத்தகுந்த ஒன்றாக உள்ளது.

அவரை ஜீனியஸ் என்று புகழ்வது பொருத்தமானது. அவர் ஆட்டத்தில் எந்த தவறையும் செய்யவில்லை. இதுவொரு ஆச்சர்யப்படும்படியான நிலை. அவரை அவுட் செய்வதைப் பற்றி சிந்திப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். அவர் தனது கடைசி 99 இன்னிங்ஸ்களில் மொத்தம் 9 முறை மட்டுமே lbw முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

எனவே, பந்தை நேராக வீசி அவரை அவுட் செய்யலாம் என நினைத்தால் தவறாகிவிடும். பந்தை ஸ்டம்பிற்கு வெளியே வீசி வேண்டுமானால் முயற்சிக்கலாம்” என்றுள்ளார் பாண்டிங்.