சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், ஸ்டீவ் ஸ்மித் எந்த தவறும் செய்யவில்லை என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே.

ரிஷப் பன்ட் போட்டு வைத்திருந்த கார்ட்(guard) ஐ (பந்தின் லைனை கணிக்கப் பயன்படும் கோடு) அழித்து, அவரைக் குழப்புவதற்காக, ஸ்மித் புதிதாக ஒரு கார்ட் வரைந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோவும் ஸ்டம்ப் கேமராவில் பதிவாகியுள்ளது. இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

‍குளிர்பான இடைவேளையின்போது இந்த செயலை ஸ்மித் செய்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதுதொடர்பாக பேசியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே, “நான் இதுதொடர்பாக ஸ்மித்திடம் பேசினேன். அவரோ, இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தது குறித்து மிகவும் வருந்துகிறார். நாம் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் ஆடும்போது கவனித்தால், அவர் இப்படி அடிக்கடி செய்வதைப் பார்க்க முடியும்.

அவர் மணலில் கோடு போடுவதை ஒரு விருப்பமான செயலாகக் கொண்டவர். அவர் நிச்சயமாக அத்தகைய தவறை செய்யவில்லை. அவர் அப்படி செய்தது உண்மையாக இருந்தால், இந்திய அணியினர் நிச்சயம் புகார் செய்திருப்பார்கள்” என்றுள்ளார் டிம் பெய்னே.