லண்டன் :

மூளையதிர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்வீரர் ஸ்டீவன் ஸ்மித், பந்தினால் ஏற்பட்ட காயம்  காரணமாக  லார்ட்ஸ் டெஸ்டிலிருந்து விலகி உள்ளார். இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில், 2வது டெஸ்டின் 5வது நாள் ஆட்டத்தின்போது,  ஆஸ்திரேலிய கிரிக்கெட்வீரர் ஸ்டீவ் ஸ்மித் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டார். அவருக்குப் பதில் மாற்று வீரராக மார்னஸ் லாபுஷாக்னே களமிறங்கினார்.  இது ஸ்மித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

ஏற்கனவே முந்தைய 4வது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் பலத்த காயம் அடைந்தார். இதனால் சிறிது நேரம் ஒய்வெடுத்த ஸ்மீத் சுமார் 40 நிமிடம் கழித்து மீண்டும் ஆடினார்.

இங்கிலாந்துடன் ஆடும் ஆஷஸ் தொடர்  டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டு இன்னிங்சிலும் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.

அதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.  போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது.  இரண்டாவது நாள் ஆடிய  இங்கிலாந்து அணி,  258 ரன்கள் குவித்தது.

அதையடுத்து ஆஸ்திரேலியாக பேட்டிங் செய்தது. ஆட்டத்தின்போது சக வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி, ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி வந்தார். அவர் 80 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய அசுர வேக பவுன்சர் பந்து, ஸ்மீத்தின் கழுத்தில் பட்டது. இதனால் வலியில் துடித்த ஸ்மித்தை உடனடியாக மருத்துவர்கள் அழைத்து சென்று முதலுதவி செய்தனர்.

இதையடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்த ஸ்மீத் மீண்டும் களமிறங்கினார். தொடர்ந்து ஆடி 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து  5வது நாள் ஆட்டத்தில் அவர் ஆடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்  கலந்துகொள்ளவில்லை.  அதனால், பெரும் பரபரப்பு எழுந்தது.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்மித் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.  ஆனால், அவர் மைதானத் துக்கு வராத நிலையில், அவருக்குப் பதில்  மாற்று வீரர் வந்தார். அதைத்தொடர்ந்து உடல்நலம் காரணமாக  ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மார்னஸ் லாபுஷாக்னே களமிறக்கப்பட்டார்.

இதற்கிடையில் ஸ்மித்தின் கழுத்தில் அடி பலமாக பட்டுள்ளதால், அவரது மூளை அதிர்ச்சி (concussion) அடைந்து, கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.