ஜெயிண்டியா, மேகாலயா

மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை இன்னும் மீட்கப் படாததால் உறவினர்கள் துயரம் அடைந்துள்ளனர்.

மேகாலயா ஜெயிண்டியா மலைப்பகுதியின் கிழக்கில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 15 சிறார் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சிக்கிக் கொண்ட அவர்களை இன்னும் மீட்கவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்தும் எந்த ஒரு பயனுமின்றி உள்ளது. இந்நிலையில் 3 தொழிலாளர்களின் தலைக்கவசம் மட்டும்நேற்று கிடைத்துள்ளது.

இதனால் அங்கு சிக்கிக் கொண்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். அந்த தொழிலாளர்களின் உடலையாவது மீட்டுத் தருமாறு கதறி வருகின்றனர். இந்த சிறுவர் தொழிலாளர்களில் ஒருவரான மோனிருல் இஸ்லாம் என்பவரின் தந்தை சோலிபர் ரகுமான் இதே சுரங்கங்களில் பணி புரிந்தவர் ஆவார். அசாமை சேர்ந்த இவரும் தனது மகனின் தற்போதைய நிலை தெரியாமல் தவித்து வருகிறார்.

சோலிபுர் ரகுமான், “நான் 30 வருடங்களுக்கும் மேலாக மேகாலயா சுரங்கங்களில் பணி புரிந்துள்ளேன். எனக்கு இந்த சுரங்கங்களில் ஏறி இறங்கத் தெரியும். நீரை முழுவதுமாக இறைத்த உடன் என்னை இறங்க அனுமதியுங்கள் என் மகனை நான் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். என் மகன் எனக்காக காத்திருக்கிறான் அவனை காப்பாற்றுங்கள்” என கதறியது அனைவரின் மனத்தையும் நெகிழச் செய்துள்ளது.