முதல்கட்ட நிவாரணம் கூட வழங்கவில்லை: மோடி அரசுக்கு தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை:

ஜா புயலால் பேரழிவை சந்தித்துள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை முதல் கட்ட நிவாரணம் கூட வழங்காததற்கு  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு செய்து வருவதாகவும், 5 மாவட்டங்களில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறோம் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மத்திய அரசு இதுவரை  கஜா புயல் நிவாரண நிதியை  மாநில அரசுக்கு கொடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. முதல் கட்டமாகவாவது  நிவாரண நிதியாக 1000 கோடி  தமிழக அரசுக்கு கொடுத்திருக்கலாம் என்றவர், தன்னை பொறுத்தவரை  கஜா புயல்  இழப்பு 15 ஆயிரம் கோடிக்கும் மேலே இருக்கலாம் என்று கூறினார்.

கஜா புயல் சேதம் குறித்து, மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இப்போதுதான் பாதிக்கப் பட்ட  இடங்களை பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்… இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது… இதை  பிரதமரோ உள்துறை அமைச்சர் பார்த்திருக்க வேண்டும்…  இப்போது கூட வந்து பார்க்க லாம் தவறில்லை என்றும் கூறினார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை  என்றவர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அதை தெளிவு படுத்தி உள்ளது. மேகதாது அணை கட்ட  மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியது தவறு என்றும் திமுக காங்கிரஸ் போன்ற ஒன்பது கட்சிகள் இணைந்து வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்… இதில் காங்கிரஸ் கலந்துகொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.