சென்னை

மிழகத்தில் உள்ள 646 கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 94 வருடங்களாக சுயமரியாதை இயக்கங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.     தமிழகத்தில் சுயமரியாதை இயக்கங்களின் மூலம் தீண்டாமை அடியோடு ஒழிக்கப்பட்டதாக பலரும் பேசி வருகின்றனர்.     தமிழகத்தில் நிலவும் தீண்டாமை குறித்து அறிய  சமூக விழிப்புணர்வு இளைஞர் இயக்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கோரி இருந்தது.  இது ஒரு தலித் மேம்பாட்டு இயக்கமாகும்.

இதற்கு அளித்த பதிலில் தீண்டாமை குறித்த வழக்குகளின் அடிப்படையில் அதிகம் தீண்டாமை உள்ள 20 தமிழக மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.     இந்த மாவட்டங்களில் உள்ள அதிக அளவில் தீண்டாமை கடைபிடிக்கப் பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் அளிக்கப்பட்டுள்ளன.   அதில் மொத்தம் 646 கிராமங்களில் தீண்டாமை இன்னும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் அதிக அளவில் திருவாரூர் மாவட்டத்தில் தீண்டாமை காணப்படுகிறது.   இம்மாவட்டத்தில்  மட்டும் 158 கிராமங்களில் தீண்டாமை நிலவி வருவதாக கூறப்படுகிறது.    இது மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் சொந்த மாவட்டமாகும்.    இந்த தொகுதியில் தொடர்ந்து கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு அடுத்த படியாக சிவகங்கை மாவட்டம் (49),  ராமநாதபுரம் (45),  தேனி (40) மற்றும் கடலூர் (38) என உள்ளன.  திருச்சி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவிலான கிராமங்களில் மட்டுமே தீண்டாமை உள்ளதாக குறப்படுகிறது.    இவைகளில் திருச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 9 கிராமங்களிலும் நீலகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களிலும் தீண்டாமை உள்ளன.

இது குறித்து சமூக விழிப்புணர்வு இளைஞர் இயக்கத்தின் தலைவர் பாண்டியன், “திருவாரூர் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தபோது தொடங்கி இந்த தீண்டாமை கொடுமைகள் நிலவி வருகின்றன.   இது விவசாயப் பகுதிகளில் உள்ள ஜமீந்தார் மனப்பான்மை ஆகும்.   திமுக தலைவர் கருணாநிதி இந்த பகுதியில் மும்முறை வென்றும் இன்னும் அது தொடர்ந்து வருகிறது.

எங்களுக்கு கிடைத்துள்ள விவரங்களை வைத்து ஒரு அறிக்கை தயார் செய்து வருகிறோம்.   இந்த பகுதிகளில் உள்ள தீண்டாமை கொடுமைகளை அடியோடு ஒழிக்க அரசிடம் அந்த அறிக்கையை அளிக்க உள்ளோம்.   இதுவரை இவ்வாறு அரசு எந்த ஒரு அறிக்கையும் தயார் செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.  எனவே இந்த அறிக்கை மூலம் சாதி வேறுபாடுகளை களைய அரசை வற்புறுத்த எண்ணி உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.