திக்… திக்… திகார்….. இன்னும் அரைமணி நேரத்தில் தூக்கிலேற்றப்படுகிறார்கள் நிர்பயா குற்றவாளிகள்…

டெல்லி:

ருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கொடூர குற்றவாளிகளான  4 பேருக்கும், இன்னும் அரை மணி நேரத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படஉள்ளது.

அதாவது சரியாக அதிகாலை  5.30க்கு டெல்லி திகார் சிறையில் உள்ள தூக்கு மேடையில், ஒரே நேரத்தில் தூக்கிலேற்றப்பட உள்ளார்கள்.

குற்றவாளிகளான  முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை 3 முறை தேதிகள் மாற்றப்பட்டு, 4வது முறையாக மார்ச் 20ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் தீர்ப்பு கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீர்ப்பை நிறைவேற்ற தேவையான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. தற்போது, 4 பேரையும் ஒரே நேரத்தில் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

சிறையில், தூக்கு தண்டனையை நிறைவேற்ற மீரட்டைச் சேர்ந்த பவன் என்பவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.  இவர் கடந்த செவ்வாய்க்கிழமை (17ந்தேதி) அன்று  இரவே திகார் சிறைக்கு வந்துவிட்டார். அதைத்தொடர்ந்து தூக்கிலிடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

டெல்லி திகார் சிறை கையேடு படி தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளுக்கு கழுத்தில் மாட்டப்படும் கயிறு சரியாக உள்ளதா என்று முந்தைய நாள் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி நேற்று  இறுதிக்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

குற்றவாளிகளின் எடையைவிட 1.5 மடங்கு அதிக எடை கொண்ட மாதிரி பொம்மைகள் தூக்கிலிடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

தூக்கு தண்டனையானது சிறைச்சாலை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரி, மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடைபெற வேண்டும். மேலும், பாதுகாப்புக்கு 10க்கும் குறையாத காவலர்கள், தலைமைக் காவலர்கள் அதற்கு இணையான துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட வேண்டும்.

விதிப்படி, அவர்கள் அனைவரும் தயாராக உள்ளனர். நீதிமன்ற உத்தரவுபடி இன்று அரைமணி நேரத்தில், சரியாக காலை 5.30 மணிக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

குற்றவாளிகளின் கழுத்தில் சுருக்கை மாட்டி, தண்டனையை நிறைவேற்ற  ஹேங்மேன் பவன் ஜலாட் தயாராக உள்ளார்.

இதன் காரணமாக திக்… திக்.. மன நிலையில் திகார் சிறைச்சாலையில் உள்ள மற்ற கைதிகளும், தூக்குதண்டனை பெற்றுள்ளவர்களின்  உறவினர்களும்… தவித்து வருகின்றனர்…

திகார் சிறையில், ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.