மும்பை:
ந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 444 புள்ளிகளும், நிப்டி 8,800 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது.
இது குறித்து பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்ததாவது:
“அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தினால், அந்நிய  முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் செய்த முதலீட்டை திரும்பப்பெறுவார்கள் என்று முதலீட்டாளர்கள் அச்சமடைந்தனர்.
தவிர,  பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள், ஆகஸ்ட் மாத சில்லரை பணவீக்கம் நிலவரம் ஆகியவை சந்தை முடிந்தபின் வெளியிடப்படுவதாக இருந்தது. இதுவும் முதலீட்டாளர்களை பயப்படுத்தியது.
இதனால், முதலீட்டாளர்கள் முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் செய்த முதலீட்டை திரும்பப் பெறத் தொடங்கினர். இதையடுத்து சந்தையில் சரிவு ஏற்பட்டது.
ரியல்எஸ்டேட், உலோகம், முதலீட்டுப்பொருட்கள், எரிசக்தி, தொழில்துறை, ஆட்டோமொபைல் ஆகிய துறைகளின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன”  என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தார்கள்.images
நேற்றைய வர்த்தக  முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 443.71 புள்ளிகள் குறைந்து, 28,353.54 புள்ளிகளில் முடிந்தது. கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி பிரிட்டன் ஓட்டெடுப்பு நடந்த போது, 604 புள்ளிகள் சரிந்தது. அதற்குபின், ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி இதுவாகும். தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 151.10 புள்ளிகள் சரிவடைந்து, 8,715.60 புள்ளிகளில் முடிந்தது.
பங்குச்சந்தையின் நிலையைக் கணக்கிடப்பயன்படும் 30 நிறுவனப்பங்குகளில் 26 நிறுவனப்பங்குகள் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அதானிபோர்ட்ஸ், ஸ்டேட் வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஹீரோ மோட்டார்ஸ் , ஐ.டி.சி. கெயில்உள்ளிட்ட பிரபல  நிறுவனங்களின்  பங்குகள் சரிவடைந்தன.
அதே நேரம், இன்போசிஸ், ரிலையன்ஸ், டி.சி.எஸ். நிறுவனப்பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினார்கள்.