டெல்லி:

ஆம்ஆத்மி அரசில் இருந்து வெளியேற்றப்பட்ட அமைச்சர் கபில்மிஸ்ரா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இதற்கிடையில் தன்னை வெளியேற்றியது குறித்த விளக்க பேரணியை கபில் மிஸ்ரா தொடங்கினார்.

இதற்கு கபில் மிஸ்ராவின் சீனியரான யோகேந்திர யாதவ் எதிர்ப்பு தெரிவித்ததால் கபில் மிஸ்ரா மன்னிப்பு கோரினார். யோகேந்திர யாதவ் ஏற்கனவே ஆம் ஆத்மியில் இருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் தற்போது ஸ்வராஜ் இந்தியா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கபில்மிஸ்ராவுக்கு யோகேந்திர யாதவ் ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார். 420 வார்த்தைகள் கொண்ட கடிதத்தை தனது பேஸ்புக் கணக்கில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தின் முடிவில் ‘‘யுவர் சீனியர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘‘ நீங்கள் சுமத்தும் அனைத்து குற்ச்சாட்டுக்களும் நான் பொய் என்று கூறவில்லை. அதில் சில குற்றச்சாட்டுக்கள் அதிக வலுவுள்ளதாக இருக்கிறது. மீதமுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

தினமும் குற்றச்சாட்டுக்களை கூறுவது ஆம்ஆத்மிக்கு முடிவை ஏற்படுத்தாது. அதே சமயம் தூய்மையான அரசியல் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு முடிவை ஏற்படுத்திவிடும். கட்சியில் ஊழல் நடந்திருப்பது குறித்து உங்களுக்கு அதிகம் தெரிந்திருந்தால் கடந்த 2 ஆண்டுகளாக ஏன் அமைதி காத்தீர்கள். தற்போது குற்றச்சாட்டுக்கள் சுமத்துவது பழி வாங்கும் செயலாக அமையுமே தவிர நிவாரணியாக இருக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில், ‘‘ நீங்கள் கேட்ட மன்னிப்பு எனது கவனத்திற்கு வந்துள்ளது. எங்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக கட்சியில் இருக்கும் ஆயிரகணக்கான தன்னார்வலர்களிடமும், லட்சகணக்கான ஆதரவாளர்களிடமும், ஏமாற்றப்பட்ட கோடி கணக்கான இந்தியர்களிடமும் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘ பலர் தவறு செய்வார்கள். நீண்ட காலம் கழித்து பொது மன்னிப்பு கேட்டுள்ளீர்கள். எனினும் இது நமது நண்பர்ளுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக இருக்கும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.