புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதா? மோடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்

சென்னை:

புல்வாமா தாக்குதல் குறித்தும், அது தொடர்பாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி ஒவ்வொரு பாஜக பொதுக்கூட்டத்திலும் பேசி வருகிறார். இதற்கு நடிகர் சித்தார் கடும் கண்டனம் தெரிவித்து கடுமையாக விமர்சித்து உள்ளார்.

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள் என டிவிட் பதிவிட்டு உள்ளார்.

கடந்த மாதம் (பிப்ரவரி) 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பினரின் தற்கொலை படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். அதைத்தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து, பயங்கரவாத முகாம்களை குண்டுவீசி அழித்து.

இந்த சம்பவங்களை, பாஜகவினர் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகின்ற னர். பிரதமர் மோடியும் தான் பங்கேற்கும் ஒவ்வொரு  பொதுக்கூட்டத்திலும், புல்வாமாக தாக்குதல், அதற்கு பதிலடியாக பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய தாக்குதல்களை பேசி வீராவேசமாக  வருகிறார்.

சமீபத்தில் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்றில் பேசும்போது,  இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டோம். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய்நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது. உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நமது ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கங்கள் என்று ஆவேசமாக பேசியவர்,  நான் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை  ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன என்றும் புலம்பினார்.

இந்த நிலையில்,   நடிகர் சித்தார்த் மோடியின் ஆவேசமான பேச்சு குறித்து டிவிட்டர் வலை பக்கத்தில் பதிவிட்டிருந்ததில்,  இந்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். உங்களையும் (மோடி), உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள்.  பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள்.

நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள் என்று விமர்சித்திருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.